சென்னை அடுத்த மாமல்லபுரத்தில்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டப்படும் என்று ராமதாஸ் அறிவித்தார். அதற்கு போட்டியாக ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அன்புமணி அறிவித்தார்.

அன்புமணி பொதுக்குழு கூட்டுவதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரிடமும் நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்திய நிலையில் அன்புமணியின் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாமகவின்  பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9 நடைபெற்றது. 2026 வரை தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் பதவியில் நீடிப்பார்கள் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானங்கள் வருமாறு:

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ‘, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன் , பொருளாளராக திலகபாமா  ஆகியோர் பொதுக் குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அவர்களின் செயல்பாடுகள் மீது பாட்டாளி மக்கள் கட்சி முழு நம்பிக்கை கொண்டுள்ளது.

பாமக உட்கட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு  பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களை நடத்த மேலும் ஓராண்டு காலக்கெடு வழங்குவது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் வரை தலைவர் பதவியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பொதுச் செயலாளர் பதவியில் வடிவேல் இராவணன், பொருளாளர் பதவியில் திலகபாமா ஆகியோர் தொடர்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம்  நடத்தப்படும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும்; விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு இதனை வெளியிட வேண்டும்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தையும், அதன் நோக்கத்தையும் வெற்றி பெறச் செய்ய பா.ம.க. உறுதியேற்கிறது.
பெண்கள் பாதுகாப்பு, சட்டம்& ஒழுங்கை உறுதி செய்யத் தவறிய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்கு.

தமிழ்நாட்டில் 4 முறை உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  தமிழ்நாட்டில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட வாய்ப்புகள் உள்ள அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டுவதை ஓர் இயக்கமாக அரசு மாற்ற வேண்டும்.காவிரி – கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!


தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 9,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும். சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
YouTube
Instagram
Telegram
WhatsApp
FbMessenger