
போர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியப் பெண்.
வாஷிங்டன்: போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரேணுகா ஜக்தியானி என்ற பெண் இடம்பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
யார் இந்த ரேணுகா.?
லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓ ரேணுகா ஜக்தியானி. இந்த நிறுவனத்தை அவரது கணவர் மிக்கி ஜக்தியாணி துவக்கினார். 2023 மே மாதம் கணவர் இறந்த பிறகு சிஇஓ பதவிக்கு ரேணுகா வந்தார். இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
மும்பை பல்கலையில் இளங்கலை பட்டம் பெற்றவர் ரேணுகா. 2007 ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது பெற்றார்.
2012 ல் அரபு நாடுகளின் தொழில்கூட்டமைப்பின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதையும் பெற்ற அவர், 2014ல் உலக தொழில்முனைவோர் அமைப்பின், சிறந்த தொழில்முனைவோர் விருதையும் பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.
1993ல் லேண்ட்மார்க் நிறுவனத்தில் இணைந்தார். பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மத்திய கிழக்கு, இந்திய துணைக்கண்டம், தெற்கு ஆசியா, ஆப்ரிக்காவில் நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்கள் லேண்ட் மார்க் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். போர்ப்ஸ் பட்டியலில், இந்தாண்டு இந்தியாவில் இருந்து மேலும் 25 பேர் கோடீஸ்வரர்கள் ஆக இணைந்துள்ளனர்.